மெல்ல மீண்டெழுகிறேன். காலத்தின் பிடியிலிருந்து ...........

Saturday, 22 August 2015

தடயம்

தடயம்




குளியலறைக் கண்ணாடியில்
அவ்வப்போது தோன்றி ஏய்க்கிறது
என்னை-உனது சிரித்த முகம்

அறை முழுதும் அரைகுறை ஆடையுடன்
நீ நடக்கும் கோலம் என்னில் வந்து போகிறது
அவ்வப்போது

மனதைச் சுடுகின்றன
புகைத் தட்டியின் சாம்பலில்
அழுத்தமாய்ப் பதித்திருக்கும்
உனது குட்டி விரல்கள் 

எஞ்சியிருக்கும் உனது அட்டை பொட்டுகள்
அடிக்கடி கொடுக்கும் நெற்றி முத்தத்தை
நினைவுபடுத்துகின்றன

அலமாரியில் நிரம்பியிருக்கும் 
உனது புடவையின் வாசம்
திறக்கையில் எல்லாம்
நெஞ்சடைக்கச் செய்கிறது என்னை

வீடெங்கும் உன்னைத் தேடி அலைந்த
நம் வீட்டுப் பூனைகள் உனக்கா
கட்டிலில் வந்து காத்திருக்கின்றன

அப்படியே விட்டுச் செல்கிறேன்
என் கழுத்தைச் சுற்றிலும்
கத்தியாக நிற்கும்
நாம் வாழ்ந்த தடயங்களை

ஏனெனில் உயிரை விடுவதில்
எனக்கு உடன்பாடில்லை
உன்னைப் போல

எனக்காக காத்திருக்கின்றன
இந்த உலகத்தின்
ஏராளமான தெருக்கள்...



No comments:

Post a Comment