மெல்ல மீண்டெழுகிறேன். காலத்தின் பிடியிலிருந்து ...........

Saturday, 22 August 2015

சில துளிகள்

01
எங்கோ தொலைத்த
சுயமரியாதையை நீ
என்னிடத்தில் தேடுவது
நியாயமில்லை
02
வழிப்போக்கனின்
கால் தடத்தில்
நாழிகள்
சுருண்டு கிடக்கும்
புழுவைப்போல
மெல்லமெல்ல
மீண்டெழுகிறேன்
காலத்தின்
பிடியிலிருந்து..
03
இன்னும் அவள் தூண்டாத
விளக்கையே
பார்த்துக்கொண்டிருக்கிறது
விட்டில் பூச்சியொன்று..
அவன் இன்னும் வீடு
வரவில்லை
04
விஷமில்லாப்
பூச்சிகளே
வெறுங்கைகளால்
நசுக்கப்படுகின்றன
05
பொதுவாக
அந்தத் தெருவழியே
நான் பயணிப்பதில்லை
அங்கே பாம்புகள்
எப்போதும் மகுடியூதிக்
கொண்டிருக்கின்றன
06
உனது கவனத்தின்
ஓரிரு நொடிகளில்
தொப்பென
நீருக்குள் வீழ்ந்து
உடல் தளர்ந்து தக்கையாய்
மிதக்கிறேன்..
07
மதுப் புட்டியும் அதன்
அடிக்குறிப்பையும் போல
சில நேரங்களில்
கவிஞனும் அவனது
கவிதையும்...

No comments:

Post a Comment